அனோஜனின் விடுதலைக்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்: சிலோன் மீடியா போரம் கோரிக்கை!

அனோஜனின் விடுதலைக்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்: சிலோன் மீடியா போரம் கோரிக்கை!
நற்பிட்டிமுனையில் அமைதிப் போராட்டம் மற்றும் கருணை மனுவில் கையொப்பம்
சவூதி அரேபியாவில் தண்டனை எதிர்கொண்டு வரும் கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுவிக்க இலங்கை அரசாங்கம் அவசர உயர்மட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனச் சிலோன் மீடியா போரம் வலியுறுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (20) சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், செயலாளர் நூருல் ஹுதா உமர் மற்றும் செயற்குழு உறுப்பினர் எம்.வி.எம். றிம்சான் ஆகியோர் அனோஜனின் இல்லத்திற்கு நேரில் விஜயம் செய்தனர்.
இதன்போது, அனோஜனின் தற்போதைய நிலைமை குறித்து அவரது தாயார் கண்ணீர்மல்க விளக்கியதுடன், தனது மகனின் உயிரைக் காப்பாற்றி விடுவிக்க உதவக் கோரி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். இக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைப்பின் பிரதிநிதிகள், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், அனோஜனின் விடுதலை குறித்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அனோஜனை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கல்முனை - நற்பிட்டிமுனை சந்தியில் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இதில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், செயலாளர் நூருல் ஹுதா உமர், செயற்குழு உறுப்பினர்களான ராஜிட் அஹமட், எம்.வி.எம். றிம்சான் மற்றும் உறுப்பினர் எம்.ஐ.எம். முஜீப் ஆகியோர் கலந்துகொண்டு தமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினர்.
மேலும், அனோஜனை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் அவசரமாகத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள கருணை மனுவிலும் சிலோன் மீடியா போரத்தின் உறுப்பினர்கள் கையொப்பமிட்டனர்.












