ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியத் திட்ட முன்மொழிவு காத்தான்குடி ஊடக அமைப்புகளிடம் கையளிப்பு

ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியத் திட்ட முன்மொழிவு காத்தான்குடி ஊடக அமைப்புகளிடம் கையளிப்பு
சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் மூவின ஊடகவியலாளர்களின் நலன் காக்கும் நடவடிக்கை
இலங்கையின் தமிழ், முஸ்லிம், சிங்களம் உள்ளிட்ட மூவின ஊடகவியலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பு மற்றும் நலன்புரிச் செயற்பாடுகளை உறுதிப்படுத்தும் நோக்கில், சிலோன் மீடியா போரத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள "இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்" (Sri Lanka Journalists Trust Fund) உருவாக்கத்திற்கான உத்தியோகபூர்வ திட்ட முன்மொழிவு அறிக்கை, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி ஊடக அமைப்புகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்ற சிலோன் மீடியா போரத்தின் முக்கிய நிர்வாகிகள், திட்ட முன்மொழிவை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர்.
காத்தான்குடி மீடியா போரத்திற்கான திட்ட முன்மொழிவு அறிக்கையை, அதன் ஆயுட்காலத் தலைவர் எம். எம். முஸ்தபா மௌலவி மற்றும் செயற்குழு உறுப்பினர் பஹட் ஜூனைட் ஆகியோரிடம் சிலோன் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் ஒப்படைத்தனர்.சுதந்திர ஊடக அமைப்பிற்கான திட்ட முன்மொழிவு அறிக்கையை, அதன் தலைவர் ஏ. எம். ஜெலீஸ் மற்றும் செயலாளர் ஏ. எச். எம். அன்வர் ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், போரத்தின் செயலாளர் நூருல் ஹுதா உமர், செயற்குழு உறுப்பினர்களான எம். வி. எம். றிம்சான், ராஜிட் அஹமட் மற்றும் உறுப்பினர் எம். ஐ. எம். முஜீப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கை ஊடகத்துறையில் பணிபுரியும் ஊடகவியலாளர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கும் அவர்களின் அவசரகால நலன்புரித் தேவைகளுக்கும் உறுதுணையாக அமையும் வகையில் உருவாக்கப்படவுள்ள இந்த நம்பிக்கை நிதியமானது, ஒட்டுமொத்த இலங்கை ஊடகத்துறையிலும் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







