இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய முன்மொழிவு அறிக்கை எம்பி ரவூப் ஹக்கீம் உட்படப் அரசியல் தலைவர்களிடம் கையளிப்பு!

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய முன்மொழிவு அறிக்கை எம்பி ரவூப் ஹக்கீம் உட்படப் அரசியல் தலைவர்களிடம் கையளிப்பு!
கல்முனையில் நடைபெற்ற மாஸ்டர் பிரின்டர்ஸ் கெட்டலொக் வெளியீட்டு விழாவில் வழங்கி வைப்பு
இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சிலோன் மீடியா போரத்தினால் முன்மொழியப்பட்டுள்ள “இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” (Sri Lanka Journalists Trust Fund) ஸ்தாபிப்பதற்கான உத்தியோகபூர்வ முன்மொழிவு அறிக்கை கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் பேக்கேஜிங் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் 'மாஸ்டர் பிரின்டர்ஸ்' புதிய கெட்டலொக் வெளியீட்டு விழா அண்மையில் (17) கல்முனை மயோன் பிலாஸா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், பொதுச் செயலாளர் நூருல் ஹுதா உமர் மற்றும் பொருளாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித் ஆகியோரினால் இம் முன்மொழிவு அறிக்கை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
அத்துடன், சிரேஷ்ட ஊடகவியலாளரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரிடமும் முன்மொழிவு அறிக்கை கையளிக்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்தியா–தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எம்.எம். ஷாஜஹான் அவர்களிடமும் இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய முன்மொழிவு அறிக்கை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் பேக்கேஜிங் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எம். ஜெஸ்மின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் அரசியல், சமூகப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம். முஸ்தபா, பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால் மற்றும் கலாநிதி எம்.ஐ.எம். றியாத் ஆகியோரின் உயரிய வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஊடகவியலாளர்களின் சமூகப் பாதுகாப்பு, நலன் மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டு முன்மொழியப்பட்டுள்ள இந்நம்பிக்கை நிதியத்தை ஸ்தாபிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் நூருல் ஹுதா உமர் இதன்போது தெரிவித்தார்.










