SuperTopAds

போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது

ஆசிரியர் - Editor II
போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 53.72 மில்லியன் ரூபா பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் கஞ்சா போதைப்பொருளை கடத்த முயன்ற இரு இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண்களும் 33 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் கொழும்பின் தெமட்டகொட மற்றும் தொட்டலங்க பகுதிகளில் வசிக்கும் வர்த்தகப் பெண்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவர்கள் நேற்று காலை சுமார் 10.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யு.எல். 403 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, அவர்கள் கொண்டு வந்திருந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் குஷ் போதைப்பொருள் அடைக்கப்பட்டிருந்த ஐந்து காற்றுப்புகாத பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்த பொதிகளில் மொத்தமாக சுமார் 5.372 கிலோகிராம் குஷ் கஞ்சா இருந்ததாகவும், அதன் சந்தை பெறுமதி சுமார் ரூ.53.72 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Radio