SuperTopAds

மூன்று வருடங்களுக்கு பின் காஸா இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட 55 உடல்கள்!

ஆசிரியர் - Editor IV
மூன்று வருடங்களுக்கு பின் காஸா இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட 55 உடல்கள்!

காஸா நகரத்தின் ஜைடூன் பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்ட குடியிருப்பு கட்டடத்தின் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து 55 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காஸா சிவில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலின் போது கட்டடத்தின் அடியில் புதையுண்டவர்களின் உடல்களை மீட்கும் பணி நேற்று சனிக்கிழமை நிறைவடைந்தது.

கனரக இயந்திரங்களின் பற்றாக்குறை காரணமாகக் கைகளாலேயே இந்த மீட்புப் பணிகள் மிக மெதுவாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

ஜைடூன் பகுதியில் வீடு ஒன்றில் தஞ்சமடைந்திருந்தவர்களே இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர்.

2023-ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் இந்தக் கட்டடம் முற்றிலும் தகர்க்கப்பட்டது.

உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ள நிலையில் வரும் வார இறுதியில் ஒருங்கிணைந்த இறுதி நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்கைக்கோள் மையத் தகவலின்படி காஸாவில் உள்ள 82 சதவீத கட்டடங்கள் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், காஸா முழுவதிலும் உள்ள இடிபாடுகளுக்கு அடியில் இன்னமும் 10000 முதல் 14000 வரையிலான மக்கள் புதையுண்டிருக்கலாம் என காசா சுகாதார அமைச்சகம் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை விரைவாக மீட்டெடுக்க தேவையான நவீன அகழ்வு இயந்திரங்கள் மற்றும் கனரக கருவிகளை உடனடியாக வழங்குமாறு சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு காஸா ஊடக அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Radio