காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் கட்டாய வெளியேற்றக் கோரிக்கையை நிராகரித்த ஐக்கிய அமெரிக்கா!

காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் கட்டாய வெளியேற்றக் கோரிக்கையை ஐக்கிய அமெரிக்கா வெளிப்படையாக நிராகரித்துள்ளது.
காஸாவை மக்கள் தொகையற்ற பகுதியாக மாற்றுவது மட்டுமே ஒரே தீர்வு என இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்த கருத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டித்துள்ளது
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச "அமைதித் திட்டத்தின்" படியே தாங்கள் இயங்குவதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, காஸாவில் இருந்து யாரும் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும், விருப்பப்பட்டு செல்பவர்கள் மட்டுமே வெளியேறவும் பின்னர் திரும்பவும் சுதந்திரம் உடையவர்கள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
காஸாவில் இருந்து பாலஸ்தீனர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு அல்லது நாடுகடத்துவதற்கு எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்கா ஆதரிக்காது எனவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே காஸாவுக்கான ட்ரம்பின் அமைதித் திட்டம் கடந்த ஆண்டு ஒப்புக்கொள்ளப்பட்ட போதிலும், காஸா மீதான தொடர் குண்டுவீச்சுகளையும் தாக்குதல்களையும் இஸ்ரேல் இன்னும் கைவிடவில்லை.
அத்துடன், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடும் வரை காஸாவில் எந்தவித மறுசீரமைப்புப் பணிகளுக்கும் இடமில்லை என்றும் இஸ்ரேல் தரப்பு திட்டவட்டமாகக் கூறியுள்ளது




