கலந்தியா பயிற்சி மையத்தை அதிரடியாக சோதனையிட்ட இஸ்ரேல்!

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள கஃப்ர் அகப் (Kafr Aqab) பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன ஏதிலிகளுக்கான நிறுவனத்துக்கு சொந்தமான கலந்தியா பயிற்சி மையத்தை இஸ்ரேலியப் படைகள் அதிரடியாக சோதனையிட்டுள்ளன.
நேற்று நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலின் போது கலந்தியா சோதனைச் சாவடி மூடப்பட்டு அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டது.
மேலும் அங்கிருந்த ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் அனைவரும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
அத்துடன் தீவிர வலதுசாரி இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இத்தாமர் பென்-கிவிர் இந்தச் சோதனையில் நேரில் கலந்துகொண்டு ஜெருசலேமிலும் இஸ்ரேலிலும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இடமில்லை என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் அந்த வளாகத்தை புதிய கல்வி மற்றும் சமூக வளாகமாக மாற்றும் பணிகளை ஜெருசலேம் நகராட்சி ஏற்கனவே தொடங்கிவிட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனுமதியின்றி ஆயுதம் தாந்திய பாதுகாப்புப் படைகள் ஐக்கிய நாடுகளின் வளாகத்திற்குள் நுழைந்தது சர்வதேச சட்டங்களின்படி ஏற்றுக்கொள்ள முடியாத கடுமையான மீறல் என்று ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
எனினும் 2024 ஒக்டோபரில் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தால் (Knesset) நிறைவேற்றப்பட்ட இஸ்ரேலில் ஐக்கிய நாடுகளின் பலஸ்தீன ஏதிலிகளுக்கான நிறுவன செயற்பாடுகளை தடை செய்யும் சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு வாதிடுகிறது.




