ஆய்வாளர் கைது விவகாரம் - அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா நிராகரிப்பு!

மியான்மர் அரசியல் ஆய்வாளரும் அமெரிக்கக் குடிமகனுமான மின் ஸின் (Min Zin) சீனாவில் தவறாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியிருந்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது.
மின் ஸின் கடந்த ஜூன் 3ஆம் தேதி, சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் நகருக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.
சீன அதிகாரிகள் அவர் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், சீனாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, மின் ஸின் கைது “தவறான கைது” (wrongfully detained) என அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தி, அவரை விடுதலை செய்ய சீனாவை வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் சீன வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் லின் ஜியான், சீன சட்டங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு அமைவாகவே இந்த வழக்கு கையாளப்படுவதாகவும், “தவறான கைது என்று எதுவும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம், வாஷிங்டன்–பெய்ஜிங் இடையிலான உறவுகளில் மேலும் ஒரு சர்ச்சையாக உருவாகியுள்ளது.




