SuperTopAds

காசா சிறுமி கொலை - ஒப்புக்கொண்ட இஸ்ரேல்- குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு!

ஆசிரியர் - Editor IV
காசா சிறுமி கொலை - ஒப்புக்கொண்ட இஸ்ரேல்- குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு!

காசாவில் 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது ஆறு உறவினர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், இஸ்ரேல் இராணுவம்தான் அவர்கள் பயணித்த காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது என முதல் முறையாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணையை தொடங்கவுள்ளதாக அது அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு நடந்த இந்த தாக்குதலில் ஹிந்த் ஆரம்பத்தில் உயிர் தப்பினார்.

காயமடைந்த நிலையில் காருக்குள் சிக்கிக் கொண்ட அவர், பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு தொலைபேசியில் அழைத்து, மணிக்கணக்கில் உதவிக்காக கதறி அழுதார்.

அந்த உரையாடலில், தனக்கு நேராகவே டாங்கிகள் வந்து கொண்டிருப்பதை தான் பார்ப்பதாகவும், "இருட்டாகிக் கொண்டிருக்கிறது, நான் பயப்படுகிறேன்" என்றும் அவர் கூறியதாக, அந்த அழைப்பை ஏற்று பேசிய ஆபரேட்டர் ரானா ஃபகீஹ் பிபிசியிடம் தெரிவித்தார்.

இஸ்ரேல் ராணுவத்துடன் ஒருங்கிணைப்பு செய்த பின்னரே, ஹிந்தை மீட்க ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது.

ஆனால், மீட்பு வாகனம் அந்த பகுதியை நெருங்கியதும், இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு மருத்துவப் பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.

அதன்பிறகு, ஹிந்த் மற்றும் மீட்பு பணியாளர்களுடனான அனைத்து தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. சில நாட்களுக்குப் பின்னரே ஹிந்தின் உடல் மீட்கப்பட்டது.

ஹிந்தின் குரல் பதிவு உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டதை அடுத்து, இந்த கொலை சர்வதேச கண்டனத்தை பெற்றது.

இந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

ஐநா இந்த வழக்கை ஒரு விசாரணை ஆணையத்தில் மேற்கோள் காட்டி, இஸ்ரேல் மீது போர்க்குற்றப் புகார்களை முன்வைத்தது.

Radio