பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இருந்து இஸ்லாமாபாத்திலுள்ள Shifa International Hospital-க்கு இரண்டு நாட்களுக்குள் மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
73 வயதான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கவலை வெளியிட்டு வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அவரது கண் பார்வை தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகளை கருத்தில் கொண்டு, மருத்துவ மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்ரான் கானின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவக் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் செப்டம்பர் 16ஆம் திகதி வரை மருத்துவமனையில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் அவரது குடும்பத்தினர் வாரத்திற்கு ஒருமுறை சந்திக்கவும், வெளிநாட்டில் வசிக்கும் அவரது மகன்களுடன் தொலைபேசியில் பேசவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
“கைதியின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அடிப்படை உரிமையாகும்” என்பதை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பான நீண்டகால சர்ச்சைகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.




