சுவிட்சர்லாந்தில் பரவும் பக்டீரியாவால் இதுவரை 28 பேர் பாதிப்பு - ஒருவர் உயிரிழப்பு - அந்நாட்டு சுகாதாரதுறை தகவல்!

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் லீஜியோனேர்ஸ் நோய் பரவியுள்ள நிலையில், இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லீஜியோனெல்லா நீமோபிலா (Legionella pneumophila) என்ற பக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது. மத்திய பாஸல் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை மையமாகக் கொண்டு நோய் பரவல் அதிகமாகக் காணப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கட்டிடங்களின் குளிரூட்டும் அமைப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் கூலிங் கோபுரங்கள் (Cooling Towers) சோதனைக்குப்படுத்தப்பட்டன.
அதன்போது, இரண்டு அலுவலகக் கட்டிடங்களின் கூலிங் கோபுரங்களில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரில் லீஜியோனெல்லா பக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குறித்த குளிரூட்டும் அமைப்புகள் உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றைச் சுத்திகரித்து சீரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நோயின் பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, கடுமையான சோர்வு, தசை வலி, வயிற்றுப்போக்கு மற்றும் சிலருக்கு இருமலுடன் இரத்தம் வெளியேறுதல் ஆகியவை காணப்படுகின்றன.
சரியான நேரத்தில் நோய் கண்டறியப்பட்டால், அன்டிபயோட்டிக் மருந்துகள் மூலம் லீஜியோனேர்ஸ் நோயை வெற்றிகரமாகக் குணப்படுத்த முடியும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




