கிராம மக்கள் எதிர்ப்பு - 20 பில்லியன் டாலர் AI டேட்டா சென்டர் திட்டத்தை நிறுத்திய அமெரிக்கா நிறுவனம்!

அமெரிக்காவின் நார்த் கரோலினா மாநிலத்தில் உள்ள எட்ஜ்கோம் கவுண்டியின் டார்பரோ அருகே, சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மிகப்பெரிய AI டேட்டா சென்டர் வளாகத்தை அமைக்க ஒரு நிறுவனம் திட்டமிட்டது.
பல கட்டங்களாக உருவாக்கப்படவிருந்த இந்த வளாகம், சுமார் 300 ஏக்கர் பரப்பளவை கொண்டதாகவும், அதிகபட்சமாக 900 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகின.
இந்தத் திட்டம் மூலம் வேலைவாய்ப்புகளும், வரி வருமானமும் அதிகரிக்கும் என்று ஆதரவாளர்கள் கூறினர்.
ஆனால் அப்பகுதி மக்கள் பல முக்கிய கவலைகளை முன்வைத்தனர்:
குறிப்பாக அதிகளவு நீர் பயன்பாடு, மின்கட்டணம் உயரக்கூடும் என்ற அச்சம், மாசுபாடு, தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் அவசர மின் ஜெனரேட்டர்களால் ஏற்படும் தொடர்ச்சியான சத்தம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி இதற்கு எதிராக மக்கள் மனுக்களை தாக்கல் செய்தனர்.
மேலும்.பொதுக் கூட்டங்களில் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
புதிய டேட்டா சென்டர்களுக்கு 24 மாதங்கள் தற்காலிகத் தடை விதிக்க வேண்டும் என்று உள்ளூர் நிர்வாகத்தையும் வலியுறுத்தினர்.
இறுதியில், 2026 ஜூலை மாதத்தில், அந்த நிறுவனம் தனது திட்டத்தை மாவட்ட நிர்வாகத்தின் பரிசீலனையிலிருந்து திரும்பப் பெற்றது.
இது, தங்கள் குரலை உறுதியாக வெளிப்படுத்திய அப்பகுதி மக்களுக்கு ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்த சம்பவம் சொல்லும் முக்கியமான செய்தி என்னவென்றால்:
ஒரு சமூகத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும் திட்டங்களில், பெரிய முதலீடுகள் மட்டுமல்ல, அங்கு வாழும் மக்களின் கருத்தும் முக்கியமானது.




