மரக்கறிகள் மூலம் பரவும் ஒட்டுண்ணி - இருவர் உயிரிழப்பு!

அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலமாக பரவும் 'சைக்ளோஸ்போரா'எனும் ஒட்டுண்ணித் தொற்றினால் பாதிக்கப்பட்ட இருவர் மிச்சிகனில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போதைய தொற்று பரவலில் பதிவான முதல் உயிரிழப்புகள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த இருவருக்கும் ஏற்கனவே கடுமையான நோய்கள் இருந்ததாகவும், இந்தத் தொற்றினால் ஏற்பட்ட நீரிழப்பு அவர்களின் உடல்நிலையை மேலும் பாதித்திருக்கலாம் என்றும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 45 மாநிலங்களில் இந்தத் தொற்று பரவியுள்ளதுடன், பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்ட சுமார் 7,000 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மிச்சிகன் மாநிலம் இதர மாநிலங்களை விட அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.
மனிதக் கழிவுகளால் அசுத்தமடைந்த நீர் மூலம் விளைவிக்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதனால் இந்த ஒட்டுண்ணி பரவுகிறது.
இது குடலைப் பாதித்து கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
காய்கறிகளை நன்றாகக் கழுவுவதுடன், குறைந்தபட்சம் 70°C வெப்பநிலையில் சமைத்து உண்பதன் மூலம் இந்த ஒட்டுண்ணியை அழிக்க முடியும் என அமெரிக்க நோய் தடுப்பு மையம் (CDC) அறிவுறுத்தியுள்ளது.
இங்கிலாந்து சுகாதார அதிகாரிகளும் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பும் பயணிகள் மூலம் தொற்று பரவாமல் இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




