கரூர் அரசபணி நியமனம் இரத்து - தீர்ப்புக்கு எதிராகத் தமிழக அரசாங்கம், இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு!

கரூரில் இடம்பெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு வழங்கப்பட்ட அரச பணி நியமனங்களை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு்ககு எதிராகத் தமிழக அரசாங்கம், இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், விஜய் உள்ளிட்ட பலரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்குக் கருணை அடிப்படையில் அரச பணிக்கான நியமனக் கடிதங்களை கடந்த 10 ஆம் திகதி கரூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கியிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் மீனவர் நிர்வாகி தீரன் திருமுருகன் உள்ளிட்டோரினால் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த 27 ஆம் திகதி விசாரித்த நீதிமன்றம், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரச பணி வழங்கி வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி தமிழக அரசாங்கம் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவில், "தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 31 பேரின் தரப்பு வாதங்களை உயர் நீதிமன்றம் செவிமடுக்கவில்லை.
எனவே, இந்த மனுவை விசாரித்து முடித்து தீர்ப்பை ரத்து செய்யும் வரை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




