போயிங் 737 MAX இல் இருக்கை கோளாறு - ஆபத்து என அமெரிக்கா எச்சரிக்கை!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான போயிங் 737 MAX விமானங்களில் பயணிகளுக்கான இருக்கைகள் தவறாகப் பொருத்தப்பட்டிருப்பதாக, அமெரிக்க தேசிய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் குறைபாடு காரணமாக, விமானம் அவசரமாகத் தரையிறங்கும் சூழலில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் காயமடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தவறாகப் பொருத்தப்பட்ட இருக்கைகள் நடைபாதையை மறைப்பதால், அவசர காலங்களில் பயணிகள் வெளியேறுவது தாமதமாகலாம் என்றும் FAA எச்சரித்துள்ளது.
இந்தக் குறைபாட்டை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என FAA உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள 453 போயிங் 737 MAX விமானங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
பொதுவாக, அமெரிக்க FAAவின் பாதுகாப்பு உத்தரவுகளை ஏனைய நாடுகளின் விமான ஒழுங்குமுறை அமைப்புகளும் பின்பற்றுவது வழக்கம் என்பதால் இது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவுப் பகுதி கழன்று விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போயிங் நிறுவனத்தின் உற்பத்தித் தரம் குறித்து ஏற்கெனவே பல கேள்விகள் எழுந்துள்ளன.
தற்போது எழுந்துள்ள இந்தப் புதிய சிக்கலைத் தொடர்ந்து, விமான உற்பத்தித் தரத்தை மேம்படுத்த போயிங் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.




