வீரவில பஸ் விபத்து - 9 பெண்கள் உட்பட 19 பேர் காயம்

மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் பஸ்ஸும், மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் 9 பெண்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திஸ்ஸமஹாராம பகுதியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. அதைத் தொடர்ந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் இருந்த மதிலை உடைத்துக்கொண்டு புகுந்து அங்கிருந்த வேப்ப மரத்தில் பலமாக மோதி நின்றுள்ளது.
பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மிக பலத்த காயமடைந்துள்ளனர்.
அதே நேரம் பஸில் இருந்த 17 பேர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த நிலையில் திஸ்ஸமஹாராம - தெபரவெவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







