துபாயின் 'புர்ஜ் கலீஃபா' விஞ்சும் சவூதியின் பிரம்மாண்ட 'ஜெத்தா டவர்'!

உலகின் மிக உயரமான கட்டடமாகத் திகழும் துபாயின் 'புர்ஜ் கலீஃபா' (828 மீட்டர்) சாதனையை முறியடிக்கும் நோக்கில், சவூதி அரேபியாவில் உருவாகி வரும் பிரம்மாண்ட 'ஜெத்தா டவர்' (Jeddah Tower) கட்டுமானம் தற்போது 107வது தளத்தைக் கடந்து வேகமாக உயர்ந்து வருகின்றது.
1 கிலோமீட்டருக்கும் அதிகமான உயர இலக்கைக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த மெகா திட்டம் ஒருபுறம் பிரம்மாண்டமான பொறியியல் சாதனையாகப் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதி கால அடையாளங்கள் குறித்தான ஹதீஸ் முன்அறிவிப்பை நினைவூட்டுவதாகச் சமூக வலைத்தளங்களில் பலத்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
"ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டுவதில் போட்டி போடுவார்கள்" என்ற நபிகளாரின் எச்சரிக்கையை மேற்கோள்காட்டி, புர்ஜ் கலீஃபாவை மிஞ்சத் துடிக்கும் வளைகுடா நாடுகளின் இந்த வானளாவிய கட்டடப் போட்டி இறுதி கால அடையாளங்களை வெளிப்படுத்துவதாக இணையவாசிகள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.




