சவூதி அரேபியாவுக்கு எதிராக கடல்சார் முற்றுகை - ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

சவூதி அரேபியாவுக்கு எதிராக உடனடி கடல்சார் முற்றுகையை விதிப்பதாக யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இரு தரப்புக்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற பரஸ்பர தாக்குதல்களைத் தொடர்ந்து, Eye for an Eye என்ற கொள்கையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹூதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ பேச்சாளர் யஹ்யா சரியா தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவுடன் தொடர்புடைய கடல்சார் கப்பல் போக்குவரத்துக்கான தடை உடனடியாக அமுலுக்கு வருவதாகத் தெரிவித்த அவர், சவூதியின் எந்தவொரு தீவிரமான நடவடிக்கைகளுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
சனா விமான நிலையத்தின் மீதான தாக்குதலுக்குப் பின்னர், இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையிலேயே ஹூதிகளின் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.




