டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு - அமெரிக்க இராணுவ வீரர்களிடம் பரிசோதனை!

அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து வீரர்களுக்கும் வருடாந்த டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை இராணுவத்தின் தயார்நிலையை மேம்படுத்த உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தத் தீர்மானம் குறித்து பல மருத்துவ நிபுணர்கள் கடும் கவலையை வெளியிட்டுள்ளனர்.
டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு இல்லாதவர்களுக்குத் தேவையற்ற முறையில் இந்த ஹோர்மோன் சிகிச்சையை வழங்குவது, அவர்களுக்கு மலட்டுத்தன்மை மற்றும் இதர உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்க சிறுநீரக மருத்துவ சங்கம் மற்றும் எண்டோகிரைன் சொசைட்டி ஆகியவற்றின் வழிகாட்டலின்படி, பாலியல் குறைபாடு, தசை இழப்பு, மற்றும் எலும்பு அடர்த்தி குறைவு போன்ற தெளிவான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே இத்தகைய சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
ஆனால், முறையான அறிகுறிகள் இன்றி சிகிச்சை அளிப்பது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர் கெவின் மெக்வாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சையானது ஆண்களின் தந்தையாகும் திறனைப் பாதிக்கும் என்றும், இது இரத்தத் தடிப்பு, புரோஸ்டேட் பிரச்சினைகள், முடி உதிர்தல் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற பல பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த பரிசோதனை 'ஒபரேட்டர் சிண்ட்ரோம்' (Operator Syndrome) என்ற பாதிப்பினால் அவதிப்படும் விசேட படை வீரர்களுக்கு உதவும் என்று பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிடுகிறார்.
இருப்பினும், சாதாரண வீரர்களுக்கு இத்தகைய தீவிரமான பரிசோதனை அவசியமா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
பல இளம் வீரர்கள் போதிய தூக்கம், சரியான உணவு மற்றும் ஓய்வு ஆகியவற்றின் மூலம் தங்கள் ஹோர்மோன் அளவை இயல்பாக்க முடியும் என்றும், மருந்துகளை மட்டுமே தீர்வாகக் கருதக்கூடாது என்றும் சில நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தற்போதுவரை, இந்த பரிசோதனை முடிவுகள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படும் என்பது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை பெண்டகன் வழங்கவில்லை.
அறிவியல் பூர்வமான தரவுகள் இன்றி இத்தகைய பரவலான பரிசோதனைகளை மேற்கொள்வது சரியான அணுகுமுறையாக இருக்காது என்று மருத்துவத் துறை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




