குவைத்தைத் தொடர்ந்து கத்தார் அமீரகம் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் தீவிர தாக்குதல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குவைத் நாட்டின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளை இலக்கு வைத்து ஈரான் தீவிர ஏவுகணை மற்றும் ஆயுதமேந்திய ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
ஹொர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவிய பதற்றத்தைத் தொடர்ந்து, அமெ"ரிக்கப் படைகள் ஈரானிய இலக்குகள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே ஈரான் இந்த அதிரடித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தங்களின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defense Systems) வெற்றிகரமாக எதிர்கொண்டு இடைமறித்து அழித்து வருவதாக ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் கேட்கும் பலத்த வெடிச்சத்தங்கள், இந்த ஏவுகணை தடுப்பு நடவடிக்கைகளால் ஏற்படுபவை என்பதால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் அமீரக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தாக்குதல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து கத்தார் நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவு (Security threat level) உடனடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, தங்களின் வீடுகளிலோ அல்லது பாதுகாப்பான தங்குமிடங்களிலோ இருக்குமாறு அந்நாட்டின் உள்நாட்டு அமைச்சகம் அவசர கால எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அண்டை நாடான பஹ்ரைனிலும் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்கள் (Air raid sirens) ஒலிக்கவிடப்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களும் பெரும் திகைப்புக்குள்ளாகியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான வளைகுடா நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் குடிமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அந்தந்த நாட்டு அரசுகள் வெளியிடும் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வழிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றுமாறும் தூதரக வட்டாரங்கள் கேட்டுக்கொண்டுள்ளன




