260 மில்லியன் டொலர் பணமோசடி - அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனத்திற்கு எதிராக FBI விசாரணை!

2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் எகிப்து அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ள போதிலும், மறுபுறம் அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் (AFA) அமெரிக்காவில் மாபெரும் நிதி மோசடிப் புகாரில் சிக்கி சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா சம்மேளனத்தின் அமெரிக்க நிதி நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் பணமோசடி (Money Laundering) விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) மற்றும் அந்நாட்டு நீதித்துறை இணைந்து அதிரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
புளோரிடாவை தளமாகக் கொண்ட 'டூர்ப்ராட்என்டர் எல்.எல்.சி' (TourProdEnter LLC) என்ற நிறுவனம் மற்றும் முன்னணி அமெரிக்க வங்கிக் கணக்குகள் மூலம் இந்த நிதிகள் பரிமாற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 'லா நேசியன்' (La Nacion) ஊடகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலின்படி, சம்மேளனத்தின் வருவாயிலிருந்து குறைந்தது 260 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதில் 57 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான நிதிப் பரிமாற்றங்களுக்கு எவ்விதமான முறையான ஆவணங்களோ அல்லது பொருளாதார ரீதியிலான நியாயங்களோ சமர்ப்பிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கிளாடியோ டாபியாவிற்கு (Claudio Tapia) பெரும் அரசியல் மற்றும் சட்ட ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏற்கனவே உள்நாட்டில் வரி ஏய்ப்பு வழக்குகளை எதிர்கொண்டு வருவதுடன், அர்ஜென்டின அதிபர் ஜேவியர் மிலே அரசாங்கத்துடனும் தொடர்ச்சியான மோதல்களில் ஈடுபட்டுள்ளார்.
மைதானத்தில் அணி சாதித்து வரும் வேளையில், சம்மேளனத்தின் இந்த பில்லியன் கணக்கிலான நிதி முறைகேடு உலகக் கிண்ணக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பெரும் கறையை ஏற்படுத்தியுள்ளது.




