ஃபிஃபா நிர்வாகம் குறித்து விசாரணை நடத்த ஐரோப்பிய நாடாளுமன்றம் வலியுறுத்து!

ஃபிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் நிர்வாகம் குறித்து விசாரணை நடத்த ஐரோப்பிய நாடாளுமன்றம் (EU) வலியுறுத்தியுள்ளது.
2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரின் நடுவே அமெரிக்க வீரர் ஃபோலாரின் பலோகனின் சிவப்பு அட்டைத் தடையை நீக்கியதில் ஏற்பட்ட அரசியல் தலையீடுகள் குறித்தே இந்த விசாரணை கோரப்பட்டுள்ளது.
இதேநேர்ம் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அரசியல் தலைவர்களின் தலையீடுகள் காரணமாக, போட்டிகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடுவர்களால் சாதகமாக நடத்தப்படுவதாக (Rigged) மிக மோசமான ஊழல் குற்றச்சாட்டுகள் ஃபிஃபா (FIFA) அமைப்புக்கு எதிராக எழுந்துள்ளன.
போஸ்னியாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்க நட்சத்திர வீரர் பலோகன் (Folarin Balogun) சிவப்பு அட்டை பெற்று அடுத்த போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிபர் டிரம்ப் ஃபிஃபா அமைப்புடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்ததால் அந்த தடை அதிரடியாக நீக்கப்பட்டது.
ஃபிஃபாவின் இந்த உலகக்கோப்பை வரலாற்று முன்னோடி இல்லாத விசித்திரமான முடிவுக்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான யுஇஎஃப்ஏ (UEFA) மற்றும் பெல்ஜியம் கால்பந்து வாரியம் ஆகியவை கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு, ஃபிஃபா தனது சொந்த விதிமுறைகளை மீறி அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து நடுநிலைமையைக் கெடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
மறுபுறம், அர்ஜென்டினா அணிக்கு எதிரான அதிர்ச்சிகரமான தோல்விக்குப் பிறகு, எகிப்து கால்பந்து அணியும் இந்த உலகக் கோப்பை தொடர் திட்டமிடப்பட்டு அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸி போன்ற பெரிய நட்சத்திரங்களை அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்ல நடுவர்களால் திருத்தப்பட்டுள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
போட்டி முழுவதும் அர்ஜென்டினாவுக்கு சாதகமாக இரட்டை நிலபாடுகளுடன் தவறான முடிவுகளை நடுவர்கள் வழங்கியதாகக் கூறி, அந்த பிரெஞ்சு நடுவர் குழுவை உலகக் கோப்பையிலிருந்து உடனடியாக நீக்கக் கோரி எகிப்து அதிகாரப்பூர்வமாக ஃபிஃபாவிடம் புகார் அளித்துள்ளது.
இந்த அடுத்தடுத்த அரசியல் மற்றும் நடுவர் சர்ச்சை விவகாரங்கள் தற்பொழுது உலகக் கோப்பை தொடரின் நம்பகத்தன்மையை ஒட்டுமொத்தமாக கேள்விக்குறியாக்கியுள்ளன.




