அரசுத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் ஒன்றுகூடி மறைந்த ஈரானிய உச்ச தலைவருக்கு அஞ்சலி!

அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் ஈரானில் இன்று உணர்ச்சிகரமாகத் தொடங்கியுள்ளன.
ஈரானிய அரசாங்கத்தின் மூன்று முக்கிய அதிகாரப் பிரிவுகளின் தலைவர்கள் - நாடாளுமன்றம், நீதித்துறை, மற்றும் நிர்வாகத்துறை) மற்றும் இஸ்லாமியக் குடியரசின் மூத்த அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து, மறைந்த உச்ச தலைவரின் பூதவுடலுக்குத் தங்களின் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தியுள்ளனர்.
அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட அலி கமேனியை "புனிதமான மாபெரும் தியாகி"என்று ஈரானிய அரசு அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிட்டு, அவருக்கு முழு அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் இந்த ஆரம்பக்கட்ட அஞ்சலி நிகழ்வை நடத்தியுள்ளது.
நாளை (ஜூலை 4) முதல் ஜூலை 9 வரை ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் உள்ள புனித நகரங்களில் 6 நாட்களுக்கு மாபெரும் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் அஞ்சலிக்கு முன்பாக, இன்று அரசு மற்றும் ராணுவத் தலைவர்களுக்கான இந்தச் சிறப்பு அஞ்சலி நிகழ்வு நடந்து முடிந்துள்ளது.
ஈரானின் மூத்த அதிகாரிகள் மற்றும் தளபதிகள் அனைவரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட நிலையில், உலக நாடுகளின் கண்கள் தேடுவது ஒருவரைத்தான்.
ஈரானின் புதிய உச்ச தலைவரும், அலி கமேனியின் மகனுமான மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) இந்த அஞ்சலி நிகழ்வில் நேரில் பங்கேற்றாரா? என்ற விபரத்தை ஈரான் ஊடகங்கள் இன்னும் வெளியிடவில்லை.
இது அவரது உடல்நிலை குறித்த உலக நாடுகளின் சந்தேகத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.
நாளைமுதல் கோடிக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி அஞ்சலி செலுத்த உள்ளதால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்தவொரு தாக்குதலும் நடக்காமல் இருக்க ஈரானிய ராணுவம் நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.




