ஐரோப்பாவை அச்சுறுத்தும் வெப்பம் - எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவர்!

ஐரோப்பியக் கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
இதன் காரணமாக இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வெப்பத்தின் அளவு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தீவிரமடைந்து வரும் இந்த வெப்பக் காற்று தற்போது கிழக்கு ஐரோப்பாவை நோக்கி நகர்ந்து வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்டோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 21 முதல் ஐரோப்பாவில் நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக 1,300-க்கும் அதிகமான கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளன. வெப்ப அழுத்தம் பெரும்பாலும் 'அமைதியான கொலையாளி' என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய வீடுகள், பணியிடங்கள் மற்றும் பாடசாலைகள் இந்த அளவிலான கடுமையான வெப்பநிலையைத் தாங்கும் வகையில் கட்டப்படவில்லை.
மேலும், பிரான்ஸ் நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள பூர்வாங்கத் தகவலின்படி, கடந்த புதன்கிழமை முதல் அந்நாட்டில் வழக்கத்தை விட சுமார் 1,000 மரணங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.
இதில் பெரும்பாலானவர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். வீடுகளில் நிகழும் மரணங்களின் எண்ணிக்கை 40 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று ஐரோப்பாவின் பல நாடுகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக ஜெர்மனி தனது வரலாற்றிலேயே மிக வெப்பமான நாளைப் பதிவு செய்துள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கோஷென் (Coschen) என்ற இடத்தில் 41.7 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
செக் குடியரசு: பிராக் நகருக்கு வடக்கே உள்ள டோக்சானி பகுதியில் 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி, இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
போலந்து: ஸ்லுபிஸ் நகரில் வெப்பநிலை 40.5 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததை அடுத்து, போலந்து தனது வரலாற்றிலேயே மிக அதிகபட்ச வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது.
தீவிர வெப்பம் காரணமாகப் பொதுமக்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைத் தடுக்க ஐரோப்பிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
வெப்பத்தின் தாக்கம் தாங்காமல் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் போன்ற பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் குளிக்கச் சென்றவர்களில், பிரான்சில் மட்டும் இதுவரை 74 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த அசாதாரண வெப்ப அலைக்கு 'வெப்பக் குமிழ்' என்று அழைக்கப்படும் வானிலை நிகழ்வே காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிகழ்வின் போது, வளிமண்டலத்தில் உள்ள காற்று கீழ்நோக்கி அமிழ்கிறது. அது தரையைத் தொடும்போது அழுத்தப்பட்டு மேலும் சூடாகிறது. இந்த கீழ்நோக்கிய காற்று வறண்டதாக இருப்பதால் மேகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால், எவ்வித தடையுமின்றி நேரடியாக விழும் சூரிய ஒளி பூமியை இன்னும் கடுமையாக வெப்பமாக்குகிறது.
புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக, 'தலைமுறைக்கு ஒருமுறை' மட்டுமே வரக்கூடிய இத்தகைய வெப்ப அலைகள், இப்போது ஆண்டுதோறும் நிகழும் ஒன்றாக மாறிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது




