வெளிநாட்டவர்களுக்கானவிசா கட்டணங்களை ஐந்து மடங்கு அதிகரித்த ஜப்பான்!

வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணங்களை ஜப்பான் அரசாங்கம் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் ஜப்பானில் விசா கட்டணங்கள் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கட்டண உயர்வு எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.
புதிய திருத்தத்தின்படி, ஒற்றை நுழைவு விசாக்களுக்கு தற்போதுள்ள 3,000 யென் கட்டணமானது, ஜூலை 1 முதல் 15,000 யென் ஆக அதிகரிக்கப்படும்.
பலமுறை நுழைவு விசாக்களுக்கு தற்போதுள்ள 6,000 யென் கட்டணமானது, 30,000 யென் ஆக அதிகரிக்கப்படும்.
கடந்த 1978 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முதலாவது விசா கட்டணத் திருத்தம் இதுவாகும். "நாட்டின் தற்போதைய பணவீக்கம் மற்றும் நாணய மாற்று விகித ஏற்ற இறக்கங்களை கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த நடவடிக்கை ஜப்பானின் உள்வரும் சுற்றுலாத்துறையில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஜப்பானிய நாணயமான 'யென்' தொடர்ச்சியாக பலவீனமடைந்து வருவதுடன், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றுச் சரிவை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
நாணய வீழ்ச்சி மற்றும் கொவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை போன்ற காரணங்களால் ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத சாதனையாக சுமார் 42.7 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த மே மாதத்தில் ஜப்பானிய நாடாளுமன்றத்தின் மேல்சபை, வெளிநாட்டவர்களுடன் தொடர்புடைய ஏனைய கட்டணங்களையும் உயர்த்துவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றியிருந்தது.
அதன்படி, நிரந்தர குடியிருப்புரிமை விண்ணப்பங்களுக்கான சட்டப்பூர்வ உச்ச வரம்பு தற்போதைய 10,000 யென்னில் இருந்து, 30 மடங்கு அதிகரிக்கப்பட்டு 300,000 யென் ஆக உயர்த்தப்படும்.
தங்களது குடியிருப்பு நிலையை மாற்றுவதற்கும் அல்லது தங்கியிருக்கும் காலத்தை நீடிப்பதற்கும் வசூலிக்கப்படும் கட்டணம் 10,000 யென்னில் இருந்து 100,000 யென் ஆக உயர்த்தப்படும்.
இந்தக் கட்டண உயர்வை நியாயப்படுத்தும் அதிகாரிகள், ஜப்பானின் விசா மற்றும் குடியிருப்பு தொடர்பான கட்டணங்களை ஏனைய ஜி7 பொருளாதார நாடுகளின் கட்டணங்களுக்கு இணையாக மாற்றுவது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
உதாரணமாக, அமெரிக்காவில் குடியேற்றம் அல்லாத விசா விண்ணப்பக் கட்டணங்கள் 185 டொலர் முதல் 315 டொலர் வரை வசூலிக்கப்படுகின்றன. அதேபோல பிரித்தானியாவிற்குச் செல்லும் பார்வையாளர்களுக்கான 6 மாத கால நிலையான விசா கட்டணம் 135 பவுண்டுகள் ஆகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




