இஸ்ரேலுக்கு எதிராகத் தென் ஆபிரிக்கா - 400 மில்லியன் டொலர் நிதியுதவியைப் நிறுத்தும் அமெரிக்கா!

உலகிலேயே அதிக எச்.ஐ.வி தொற்றாளர்களைக் கொண்ட தென் ஆபிரிக்காவுக்கு, 'Pepfar' திட்டம் மூலம் ஆண்டுதோறும் வழங்கி வந்த 400 மில்லியன் டொலர் நிதியுதவியைப் படிப்படியாக நிறுத்த அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளது.
தென் ஆபிரிக்காவில் சிறுபான்மை வெள்ளையின 'ஆப்ரிகானர்' சமூகத்தினரை அந்த நாட்டு அரசாங்கம் பாதுகாக்கத் தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராகத் தென் ஆபிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கு மற்றும் ஈரானுடனான அதன் நெருங்கிய உறவு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி இந்த நிதியுதவி நிறுத்தப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தென் ஆபிரிக்கா ஒரு நடுத்தர வருவாய் கொண்ட நாடு என்பதால், தனது சொந்த சுகாதாரத் திட்டங்களை முன்னெடுக்கும் தகுதி அதற்கு உள்ளதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தென் ஆபிரிக்க அரசாங்கம், தங்களுக்கு இந்த முடிவு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், தாங்கள் ஏற்கனவே "சுயசார்புத் திட்டம்" ஒன்றின் கீழ் பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், நோயாளிகளுக்கான உயிர் காக்கும் 'ஏஆர்வி' (ARV) மருந்துகளுக்கான செலவுகளைத் தென் ஆபிரிக்க அரசே நேரடியாக ஏற்று நடத்துவதால், மருந்து விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என்றும் அந்த நாட்டுச் சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.




