SuperTopAds

அவுஸ்திரேலியாவில் மிக வேகமாகப் பரவும் 'H5' ரகப் பறவைக் காய்ச்சல்!

ஆசிரியர் - Editor IV
அவுஸ்திரேலியாவில் மிக வேகமாகப் பரவும் 'H5' ரகப் பறவைக் காய்ச்சல்!

அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் மிக வேகமாகப் பரவக்கூடிய 'H5' ரகப் பறவைக் காய்ச்சல் தொற்று முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம், உலகிலுள்ள அனைத்துக் கண்டங்களிலும் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் விவசாய அமைச்சர் ஜூலி காலின்ஸ் (Julie Collins) மற்றும் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் ஆகியோர் இந்த தகவலை உறுதிப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான பேர்த் நகருக்கு தென்கிழக்கே சுமார் 630 கிலோமீட்டர் தொலைவில் , இடம் பெயர்ந்து வாழும் 'பிரவுன் ஸ்குவா' (Brown skua) என்ற கடல் பறவைக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பதை அந்நாட்டின் தேசிய அறிவியலாளர்களால் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், அதே பகுதியில் கண்டறியப்பட்ட 'ஜியண்ட் பெட்ரல்' (Giant petrel) என்ற மற்றுமொரு பறவைக்கும் தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இதுவரை உலகிலேயே அவுஸ்திரேலியா மாத்திரமே இத்தொற்று பரவாத ஒரே கண்டமாக விளங்கியது.

தற்போதைய கண்டறிதலின் மூலம், உலகிலுள்ள அனைத்துக் கண்டங்களிலும் 'H5' வைரஸ் பரவியுள்ளது.

இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் இந்த H5 பறவைக் காய்ச்சல் பரவி வரும் வேகத்தைப் பார்க்கும்போது, இந்தச் செய்தி ஏமாற்றமளித்தாலும், இது நாம் எதிர்பார்க்காத ஒன்று அல்ல" என விவசாய அமைச்சர் ஜூலி காலின்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது அவுஸ்திரேலியாவில் பெருமளவிலான பறவை இறப்புகளோ அல்லது கோழி பண்ணைகளில் பாதிப்புகளோ பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Radio