FIFA உலகக் கிண்ணம் - போட்டி முடிந்தவுடன் அமெரிக்காவை விட்டு வெளியேறிய ஈரான்!

வட அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக் கிண்ணக் (FIFA World Cup 2026) காற்பந்து தொடரின் குரூப் 'ஜி' பிரிவு ஆட்டத்தில், ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய விறுவிறுப்பான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் (Draw) முடிவடைந்தது.
இருப்பினும், இப்போட்டி முடிந்த சில மணிநேரங்களிலேயே ஈரான் அணியை உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேறி, மெக்சிகோவில் உள்ள தங்களின் பயிற்சி முகாமுக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமீர் கலேனோய் (Amir Ghalenoei) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
போட்டிக்கு பின் வீரர்கள் தங்களது உடல்நிலையைத் தேற்றிக்கொள்ளும் (Recovery) பொருட்டு கலிபோர்னியாவில் இரவு தங்குவதற்குத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், போட்டி முடிந்த உடனேயே 140 மைல் தொலைவில் உள்ள மெக்சிகோவின் திஹுவானா (Tijuana) நகருக்கு விமானம் ஏறுமாறு அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.
"எங்களுக்கு உடலைத் தேற்றிக்கொள்ளக் கூட நேரம் தரவில்லை" எனப் பயிற்சியாளர் கலேனோய் மொழிபெயர்ப்பாளர் மூலம் தெரிவித்துள்ளார்.
"உலகக் கிண்ணத் தொடரிலேயே மிகவும் ஒடுக்கப்பட்ட அணியாக எங்கள் அணிதான் இருக்கும் என நினைக்கிறேன்" என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தொடரும் விசா மற்றும் பயணச் சிக்கல்கள்
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் போரைத் தொடங்கியதில் இருந்தே, ஈரானின் உலகக் கிண்ணப் பயணம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
தங்களின் குழு நிலைப் போட்டிகளை அமெரிக்காவிற்கு வெளியே மாற்றுமாறு ஈரான் விடுத்த கோரிக்கையை ஃபிஃபா (FIFA) நிராகரித்த நிலையிலும், ஈரான் இத்தொடரில் விளையாடி வருகிறது.
ஈரான் கால்பந்து சம்மேளனத் தலைவர், உதவிப் பயிற்சியாளர்கள் மற்றும் ஊடக அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியப் பணியாளர்களுக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்துள்ளது.
இது குறித்துப் பேசிய அணியின் கேப்டன் மெஹ்தி தாரெமி (Mehdi Taremi), "பாதுகாப்பு சோதனைகளுக்காகவே நாங்கள் பல மணிநேரம் பயணிக்க வேண்டியுள்ளது.
எங்களின் சூழல் ஒரு பேரழிவு போன்றது, FIFA எங்களுக்கு மேலும் உதவ வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
முறையான பயணத் திட்டமிடல் மற்றும் தயாரிப்பு இல்லாததால் பல வீரர்களுக்குப் போட்டியின் போது தசைப்பிடிப்பு (Cramps) ஏற்பட்டதாகவும், அதனால் தான் மாற்று வீரர்கள் களம் இறக்கப்பட்டதாகவும் பயிற்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் சமனான போட்டி
லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகிலுள்ள சோஃபை (SoFi) மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ஈரானிய ரசிகர்களின் முன்னிலையில் இப்போட்டி நடைபெற்றது.
நியூசிலாந்து அணியின் எலிஜா ஜஸ்ட் (Elijah Just) இரு பாதிகளின் தொடக்கத்திலும் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
இருப்பினும், ஈரான் அணி சார்பில் ரமின் ரெசேயன் (Ramin Rezaeian) மற்றும் முகமது மொஹேபி (Mohammad Mohebi) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து போட்டியை 2-2 எனச் சமநிலைக்குக் கொண்டு வந்தனர். மைதானத்திற்கு வெளியே ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், மைதானத்திற்குள் கூடியிருந்த ரசிகர்கள் தங்களது நாட்டு வீரர்களுக்கு முழு ஆதரவை வழங்கினர்.
ஈரான் அணி தனது அடுத்த குழுநிலைப் போட்டியில் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்ளவுள்ளது




