எரிபொருள் ஏற்றுமதியைத் தடையின்றி முன்னெடுக்க அமெரிக்க இரகசிய திட்டம் - போட்டுடைத்த ரொய்ட்டர்ஸ்!

வளைகுடா நாடுகளின் எரிபொருள் ஏற்றுமதியைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக, அமெரிக்க இராணுவம் வான்வெளி மற்றும் கடல்சார் ட்ரோன்கள் மற்றும் உலங்கு வானூர்திகளை பயன்படுத்தி, கடலில் கப்பல்களுக்கு இடையே பல இரகசிய எண்ணெய் பரிமாற்றங்களை மேற்கொண்டு வருவதாக 'ரொய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது.
ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிப்பதற்காக அந்த நாடு நீண்டகாலமாகப் பயன்படுத்தி வந்த அதே பரிமாற்ற உத்தியை, தற்போது அமெரிக்கா கையில் எடுத்துள்ளதாக இந்த விவகாரத்தை நன்கு அறிந்த 11 தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா (Fujairah) கடற்கரைக்கு அப்பாலும், ஓமானின் சோஹர் (Sohar) துறைமுகத்திற்கு அருகிலும் இந்த இரகசிய எண்ணெய் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த மே மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளில், இதுவரை குறைந்தது 92 கப்பல்கள் ஈடுபட்டுள்ளமை செயற்கைக்கோள் படங்களின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 11 ஆம் திகதி வரையிலான செயற்கைக்கோள் தரவுகளின்படி, ஒரே நேரத்தில் 17 கப்பல்கள் இந்த இரு இடங்களிலும் எண்ணெய் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளமை பதிவாகியுள்ளது.
கடந்த ஜூன் 9 ஆம் திகதி ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் 'அப்பாச்சி' (Apache) உலங்குவானூர்தி இந்த இரகசிய விநியோகப் பணியிலேயே ஈடுபட்டிருந்ததாக நான்கு முக்கிய ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரானுக்கு எதிராகப் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தியிருந்தது.
இருப்பினும், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (Centcom) இந்த கடல்சார் எண்ணெய் பரிமாற்ற நடவடிக்கைகளில் தங்கள் படைகள் ஈடுபடவில்லை என மறுத்துள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அமைப்பின் கீழ், எண்ணெய் ஏற்றிய கப்பல்கள் தங்களின் இருப்பிடத்தை காட்டும் 'டிரான்ஸ்பொண்டர்' (Transponder) கருவிகளை அணைத்துவிட்டும், விளக்குகளை மங்கலாக்கியும் நள்ளிரவில் பயணிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் தனது கட்டுப்பாட்டு எல்லை என அறிவித்துள்ள பகுதிக்கு சற்று வெளியே, இந்த சிறிய கப்பல்கள் சர்வதேச அளவில் பெரிய எண்ணெய் ஏற்றிச் செல்லும் பிரம்மாண்ட 'VLCC' ரக கப்பல்களுடன் இணைந்து எண்ணெயைப் பரிமாறுகின்றன.
இந்த ஒரு பரிமாற்றத்துக்கு 24 முதல் 40 மணித்தியாலங்கள் வரை எடுக்கின்றது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை பகுதியளவில் மூடப்பட்டதால், உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட எரிபொருள் விநியோகத் தட்டுப்பாடு மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இந்த ஆபத்தான உத்தியைக் கையாண்டு வருவதாகத் தெரிகிறது.
இராணுவக் கப்பல்களின் நேரடிப் பாதுகாப்பு இன்றி, வான்வெளி கண்காணிப்பு மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை அலுவலகத்தின் ஒருங்கிணைப்பு மூலம் மட்டுமே இந்த கப்பல்கள் இயக்கப்படுவதால், நள்ளிரவில் கப்பல்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் அபாயமும் இதில் காணப்படுவதாக கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.




