ஈரான் விவகாரம் - அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் குழப்பம்!

ஈரானுடனான தற்போதைய போரின் மூலம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முறையான திட்டமிடல் ஏதுமின்றி, தன்னிச்சையாகவும் அவசரக்கோலத்திலும் முடிவுகளை எடுத்து வருவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர் மொஹமட் எல்மாஸ்ரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே விரைவில் உடன்படிக்கை ஒன்று கையெழுத்தாகுமா என்பதை உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் வேளையில், தற்போதைய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பெரும் குழப்பநிலை நீடிப்பதாக தோஹா உயர்கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மொஹமட் எல்மாஸ்ரி தெரிவித்துள்ளார்.
தற்போதைய போர்ச் சூழல், அமெரிக்கா மற்றும் அதன் நிர்வாகத்தின் மிக மோசமான தவறான கணக்கீடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் உடன்படிக்கை தொடர்பில் இன்னும் பல முக்கிய கேள்விகளுக்குப் பதிலற்ற நிலை நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பாக ஈரானின் அணுசக்தி விவகாரம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு குறித்து இன்னும் தெளிவற்ற தன்மையே உள்ளதாகக் கூறினார்.
உலகளாவிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றும் அங்கு கட்டணம் வசூலிப்பது போன்ற விடயங்களில் அமெரிக்காவின் இறுதி நிலைப்பாடு என்ன என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
அதேபோன்று, ஈரான் தொடர்ந்து யுரேனியத்தை செறிவூட்டுவது மற்றும் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பிலும் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் கடுமையான முரண்பாடுகள் நீடிப்பதாக பேராசிரியர் மொஹமட் எல்மாஸ்ரி மேலும் தெரிவித்துள்ளார்




