SuperTopAds

இஸ்ரேல் மனிதாபிமானத்தை இழந்து வருகின்றது அதிபர் ஐசக் ஹெர்சாக் எச்சரிக்கை !

ஆசிரியர் - Editor IV
இஸ்ரேல் மனிதாபிமானத்தை இழந்து வருகின்றது அதிபர் ஐசக் ஹெர்சாக் எச்சரிக்கை !

மத்திய கிழக்கில் போர்நிறுத்த உடன்பாடுகளுக்கு மத்தியிலும் உள்நாட்டு மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் (Isaac Herzog) அந்நாட்டுச் சமூகம் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து வெளியிட்டுள்ள அதிரடி எச்சரிக்கை சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

இஸ்ரேலின் வலதுசாரி அமைச்சர்களுக்கும் அதிபருக்கும் இடையே வெடித்துள்ள இந்த நேரடி மல்லுக்கட்டு, இஸ்ரேலியச் சமூகத்திற்குள் இருக்கும் ஆழமான பிளவுகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

ஜெருசலேமில் நடைபெற்ற ஒரு முக்கிய மாநாட்டில் பேசிய இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், தனது சொந்த நாட்டு அரசு மற்றும் தீவிரப் போக்குடைய யூதக் குடியேறிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்

"இஸ்ரேலியச் சமூகம் மெல்ல மெல்ல தனது மனிதாபிமானத்தை இழந்து, ஒரு கொடூரமான மனநிலைக்கு (Cruel Mentality) சென்றுகொண்டிருக்கிறது. வன்முறை என்பது இன்று சாதாரண ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

வேதனை என்னவென்றால், சிலர் அந்த வன்முறையைக் பகிரங்கமாகக் கொண்டாடவும் செய்கிறார்கள்," என்று கவலை தெரிவித்தார்.

பாலஸ்தீனக் கைதிகளுக்கு எதிராகச் சிறைகளில் நடத்தப்படும் சித்திரவதைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று சாடிய அவர், இஸ்ரேலில் வாழும் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது யூதத் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதல்களுக்கும் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்தார்.

அதிபர் ஹெர்சாக் தனது உரையில் இஸ்ரேல் ராணுவத்தின் (IDF) தற்போதைய அவலநிலை குறித்தும் வெளிப்படையாகப் பேசினார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் (West Bank) பாலஸ்தீன மக்களுக்கு எதிராக யூதக் குடியேறிகள் நடத்தும் வன்முறைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக, இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் தங்களது முதன்மைப் பணியான 'பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில்' (Counter-Terrorism) கவனம் செலுத்த முடியாமல், இந்த உள்நாட்டுக் குடியேறிகளின் வன்முறைகளையும் குழப்பங்களையும் சமாளிக்கவே தங்களது முழுக் காலத்தையும் வீணடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

அதிபர் ஹெர்சாக்கின் இந்த உரையைக் கேட்டு இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்வீர் (Itamar Ben-Gvir) நள்ளிரவில் அவசரமாகக் கொதித்தெழுந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்:

"லட்சக்கணக்கான இஸ்ரேலியத் தேசபக்தர்களை 'மிருகங்கள்' என்றும் 'கொடூரமானவர்கள்' என்றும் பொதுவெளியில் அவதூறு பரப்பும் ஒரு நபர், இந்த நாட்டின் அதிபராக நீடிப்பதற்குச் சற்றும் தகுதியற்றவர்! காசா கப்பல் ஆர்வலர்களை நாம் கைகளைக் கட்டி முழங்காலிடச் செய்ததில் எந்தத் தவறும் இல்லை."

மேலும் அவர் பேசுகையில், தங்களது அமைச்சகத்தின் கீழ் உள்ள இஸ்ரேல் சிறைகள் தற்போது பாலஸ்தீனப் பாதுகாப்பு கைதிகளுக்கு "உண்மையான நரக சிறைகளாக" (Real Prisons) மாற்றப்பட்டிருப்பதில் தான் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்வதாக மிகவும் ஆக்ரோஷமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே காசா போரின் கொடூரங்கள் மற்றும் லெபனான் எல்லையில் ஹெஸ்புல்லா நடத்தி வரும் FPV டிரோன் தாக்குதல்களால் 11 இஸ்ரேல் வீரர்கள் பலியான அதிர்ச்சியில் உள்ள இஸ்ரேலிய மக்கள் மத்தியில், இந்த 'அதிபர் vs அமைச்சர்' மோதல் மேலும் ஒரு சமூகப் பிளவை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் அரசுக்குள்ளேயே அறநெறி சார்ந்தக் கருத்து வேறுபாடுகள் வெடித்திருப்பது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Radio