அமெரிக்காவிற்கு பாதுகாப்பான புகலிடம் கிடையாது - ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி அதிரடி!

வளைகுடாவில் அமெரிக்கா - ஈரான் இடையே 60 நாள் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் கத்தாரில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தற்போதைய பதற்றமான சூழலில், புனித மக்கா நகரில் ஹஜ் கடமைகள் தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையத் மொஜ்தபா கமெனி வாஷிங்டனை உலுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹஜ் செய்தியை வெளியிட்டுள்ளார்!
தனது அதிகாரப்பூர்வ 'Khamenei.ir' தளத்தின் வழியாகவும் சமூக ஊடகங்கள் வழியாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில், "காலச் சக்கரம் ஒருபோதும் பின்னோக்கிச் செல்லப் போவதில்லை.
இந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளும் அதன் மக்களும் இனி அமெரிக்காவின் ராணுவத் தளங்களைப் பாதுகாக்கும் 'கேடயங்களாக' தங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டார்கள்.
அமெரிக்கா தனது சதித்திட்டங்களையும், தீமைகளையும் அரங்கேற்ற மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இனி பாதுகாப்பான புகலிடங்களை வைத்திருக்க முடியாது" என மிக ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது 'முஷ்ரிக்குகளைப் புறக்கணிக்கும்' கொள்கை இரட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்கள் வெறும் சடங்காக இல்லாமல் முஸ்லிம்களின் அன்றாட இராஜதந்திர வாழ்வின் அங்கமாக மாற வேண்டும் என்றும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஆட்சி அதன் இறுதி அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும் பிரகடனம் செய்துள்ளார்.
இஸ்லாமிய உம்மத்தின் கூட்டுத் திறன்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு வரும் 'புதிய பிராந்திய ஒழுங்கு', உலகளாவிய புதிய இஸ்லாமிய நாகரிகத்திற்கு வழிவகுக்கும் என்றும் கமெனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.




