ஈரானின் முழு ஆதிக்கத்தில் ஹோர்முஸ் நீரிணை - அனுமதி பெற்று பயணித்த 31 பன்னாட்டு கப்பல்கள்!

வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் 'ஹோர்முஸ் நீரிணை' முற்றிலும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) கடற்படையின் மூலோபாயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் ராணுவ எச்சரிக்கைகள் மற்றும் இஸ்ரேலின் சதித் திட்டங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானிய ராணுவம் இப்பகுதியில் அசுரத்தனமான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
நேற்று இரவுமுதல் இந்த நீரிணை வழியாகப் பயணிக்க முயன்ற ராட்சத கச்சா எண்ணெய் டாங்கர்கள் உட்பட 31 பன்னாட்டு வணிகக் கப்பல்கள், ஐஆர்ஜிசி கடற்படையின் ரேடார் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு, உரிய அனுமதி மற்றும் பாதுகாப்புச் சான்றுகளைப் பெற்ற பின்னரே தங்களின் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளன.
"அதிகாரம் மட்டுமே எதிரிகள் புரிந்து கொள்ளும் மொழி" என ஈரான் நாடாளுமன்றம் அறிவித்திருந்த நிலையில், கடல் எல்லையில் ஈரான் நிலைநாட்டியுள்ள இந்த முழுமையான இறையாண்மை மேற்கத்திய நாடுகளுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.




