புஷேர் அணுமின் நிலையத்திற்கு மீண்டும் செல்லும் ரஷ்ய ஊழியர்கள்!

கடந்த பெப்ரவரி இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காகப் புஷேர் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தங்களது ஊழியர்களை மீண்டும் அங்கு அனுப்ப ரஷ்யா தயாராகி வருகிறது.
இது குறித்து ரஷ்ய அரசு அணுசக்தி முகமையான 'ரோசாட்டம்' அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸி லிகாச்சேவ் பேசுகையில், "வரும் வாரங்களில் புஷேர் அணுமின் நிலையத்திற்கான பணியாளர்களின் எண்ணிக்கையை முழுமையாக மீட்டெடுக்கும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
அங்கு 2 புதிய அலகுகளைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியேற்றப்பட்டு, வெறும் 20 அதிகாரிகள் மட்டுமே கண்காணிப்புப் பணியில் இருந்தனர். தற்போது அங்கு 2,200-க்கும் மேற்பட்ட ஈரானிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், திட்டமிட்ட இலக்குகளை அடைய ரஷ்ய வல்லுநர்களும் விரைவில் களமிறங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




