போர்வீரர் நினைவுத்தூபியில் விமல் வீரவன்ச அத்துமீறல்; விமலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பத்தரமுல்லையில் தேசிய வீரர் தின நினைவு நிகழ்வுக்கான ஒத்திகையின் போது நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் சுமார் 35 பேர் கொண்ட குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெறும் தேசிய வீரர் தின நிகழ்வுக்கான ஒத்திகை, பாராளுமன்ற மைதானத்திற்கு அருகிலுள்ள தேசிய வீரர்கள் நினைவிடத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
ஒத்திகை மற்றும் பிரதான நிகழ்வு ஆகிய இரண்டிற்குமான முன் ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, விமல் வீரவன்ச தலைமையிலான ஒரு குழுவினர் அனுமதியின்றி நினைவிட வளாகத்திற்குள் நுழைய முயன்று, ஒத்திகைப் பணிகளுக்கு இடையூறு விளைவித்து, அவ்விடத்திலிருந்த அதிகாரிகளின் கடமைகளில் அவர்கள் தலையிட்டனர்.
அவ்விடத்திலிருந்த அதிகாரிகள் அந்தக் குழுவினர் உள்ளே நுழைவதைத் தடுத்ததாகவும், பின்னர் கூடியிருந்தவர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. வீரவன்ச மற்றும் அக்குழுவின் உறுப்பினர்கள் மீது இச்சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்திருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.







