SuperTopAds

காணியின் பெறுமதியை குறைக்க இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது

ஆசிரியர் - Editor II
காணியின் பெறுமதியை குறைக்க இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது

காணி ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையை குறைந்த பெறுமதியில் தயாரித்துக் கொடுப்பதற்காக 35,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலன்னறுவை மாகாண வருமான வரி, மாவட்ட அலுவலகத்தின் சுகாதாரத் தொழிலாளி  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

முறைப்பாட்டாளரின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான அரச காணியை, முறைப்பாட்டாளரின் பெயருக்கு மாற்றி உறுதிப்பத்திரம் தயாரிக்கும்போது, குறித்த காணியின் மதிப்பீட்டுப் பெறுமதியை குறைத்துக் குறிப்பிடுவதாக சந்தேகநபர் வாக்குறுதியளித்துள்ளார். 

இதன் மூலம் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய முத்திரை வரித் தொகையைக் குறைத்துக் கொடுப்பதற்காக அவர் ஆரம்பத்தில் 50,000 ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளார். 

பின்னர் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், இலஞ்சத் தொகை 35,000 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.