தமிழ்க்கட்சிகளின் மூன்றாவது சந்திப்பு இன்று

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கிலான மூன்றாவது சந்திப்பு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் இன்றைய தினம் புதன்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு சந்திப்புக்களில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களுக்கு இடையில் பொது இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன.
இந்நிலையில் கடந்த மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின்போது புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்கள் தொடர்பில் தமது கட்சிகளுடன் கலந்துரையாடி இறுதித்தீர்மானத்தை அறிவிப்பதற்குக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் உடன்பட்டிருந்ததன் அடிப்படையில், இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கான சந்திப்பு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் இன்றைய தினம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது




