SuperTopAds

மருந்துப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

ஆசிரியர் - Editor II
மருந்துப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

இலங்கையில் மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளைத் தடையின்றி அணுகுவதை உறுதி செய்யும் நாட்டின் திறன் பாதிக்கப்படக்கூடும் என இலங்கை மருந்துத் தொழில்துறை சம்மேளனம் (SLCPI) எச்சரித்துள்ளது. 

இந்த மருந்துப் பற்றாக்குறை நெருக்கடியைத் தடுப்பதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. 

உடனடி மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தனியார் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் அதிகரித்து வரும் தட்டுப்பாட்டை இலங்கை எதிர்கொள்ளக்கூடும் என்றும், இது நோயாளிகள், மருத்துவமனைகள் மற்றும் முழு சுகாதாரக் கட்டமைப்பையும் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

குறிப்பாக, எரிபொருள் விலைகள் சுமார் 38 வீதத்தாலும், சரக்குக் கட்டணங்கள் 40 வீதத்திற்கும் அதிகமாகவும் உயர்ந்துள்ளன. 

அத்துடன், மருந்து மூலப்பொருட்களின் உலகளாவிய விலைகள் சில சந்தர்ப்பங்களில் 70 வீதம் வரை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை இறக்குமதி செலவை கணிசமாக உயர்த்தியுள்ளது. 

தற்போதைய இறக்குமதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் மற்றும் விலை மீளாய்வு செயன்முறையில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் இந்த அழுத்தங்களை மேலும் அதிகரிப்பதாக SLCPI குறிப்பிட்டுள்ளது. 

எனவே, இறக்குமதி உரிமச் செயலாக்கத்தில் உள்ள தாமதங்களை நிவர்த்தி செய்து, மருந்து விநியோகச் சங்கிலியை ஸ்திரப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்மேளனம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.