ஏழு ஆண்டுகள் கடந்தும் விடை தெரியாத துயரம்

முழு உலகையுமே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களுக்கான 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் உணர்வுபூர்வமாக நடைபெறுகின்றன
நீதி மற்றும் உண்மையை நிலைநாட்டக் கோரி முன்னெடுக்கப்படவுள்ள இந்நாளை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு மற்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலாவது குண்டு வெடித்த நேரத்தைக் குறிக்கும் வகையில், காலை 8:45 மணிக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தேவாலயங்களிலும் மணி ஒலிக்கப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் பிரதான நினைவேந்தல் நடைபெற்றது.
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் காலை 7:30 மணிக்கு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, காலை 8:45 மணிக்கு நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி, மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா மைதானத்திலிருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை "நீதி மற்றும் உண்மை வேண்டி" மாபெரும் பிரார்த்தனைப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததுடன், 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.




