10 இலட்ச ரூபாய் அதிஷ்ட பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

களுத்துறை - ஹொரணை, பொகுணுவிட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிர்ஷ்ட லாபச் சீட்டில் பரிசில் வென்ற பணத்தைப் பெற்றுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பத்து இலட்சம் ரூபாய் பணப் பரிசை வென்றதையடுத்து, அதற்கான காசோலையைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த நபர் தனது நண்பருடன் கொழும்புக்குச் சென்றுள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் ஹொரண நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்திய நண்பருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மதகு ஒன்றில் மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த நபர் உயிரிழந்ததுடன், செலுத்தியவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சண்முகம் ஆனந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.
இவர் கடந்த மூன்று வருடங்களாக கிரிஎல்ல பகுதியில் உள்ள ரஜமகா விகாரையில் தங்கியிருந்து அன்னதானம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




