SuperTopAds

அம்பாறை மேல்நீதிமன்ற நீதிபதியை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை - பாதிக்கப்பட்ட தரப்பு எதிர்ப்பு

ஆசிரியர் - Editor III
அம்பாறை மேல்நீதிமன்ற நீதிபதியை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை - பாதிக்கப்பட்ட தரப்பு எதிர்ப்பு

அம்பாறை மேல்நீதிமன்ற நீதிபதியை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை - பாதிக்கப்பட்ட தரப்பு எதிர்ப்பு

( விசேட செய்தியாளர்)

தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றமுறையான அச்சுறுத்தல் மற்றும் பகிரங்க நொத்தாரிசு ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தற்போதைய அம்பாறை மேல்நீதிமன்ற நீதிபதி அந்தோனி ஜெயலக்‌ஷி டி சில்வா  என்பவரை, குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு (Discharge) கௌரவ சட்டமா அதிபரால் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றில் நேற்று (11) விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

வழக்கின் பின்னணியும் குற்றச்சாட்டுகளும்: 

கல்முனை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள B/940/22 எனும் இந்த வழக்கு தொடர்பாக பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட 'B' அறிக்கையில், சந்தேகநபரான நீதிபதிக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவையின் 486ஆம் பிரிவு (குற்றமுறையான அச்சுறுத்தல்) மற்றும் 344ஆம் பிரிவு (அரசு உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்தல்) ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பொலிஸ் அறிக்கையும் சட்டமா அதிபர் ஆலோசனையும் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் நீதிமன்றில் மேலதிக அறிக்கை (Further Report) ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில், கௌரவ சட்டமா அதிபர் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயரத்ன கையொப்பமிட்டு அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பியிருந்த ஆலோசனைப் கோவை சமர்ப்பிக்கப்பட்டது. சந்தேகநபருக்கு எதிராக இனிமேல் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கவில்லை என்பதால், அவரை விடுவிக்க முடியும் என நீதவானுக்கு அறிவிக்குமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பொலிஸார் சமர்ப்பித்த மேலதிக அறிக்கையில் சில குறைபாடுகள் காணப்படுவதை அவதானித்த கௌரவ நீதவான் K.L.M. சாஜித் அவர்கள், அந்த விடயங்களைத் திருத்தி இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட தரப்பின் வாதங்கள்: 

பாதிக்கப்பட்ட தரப்பான முரளிதரன் என்பவர் சார்பில் சட்டத்தரணிகளான எம். முபாறக், அ.நிதான்சன் மற்றும் சுஹால்ஸ் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகினர். கௌரவ சட்டமா அதிபரின் இந்த ஆலோசனை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பின் எதிர்ப்பையும் அது தொடர்பான விடயங்களை முன்வைக்க ஒரு தினத்தை வழங்குமாறு அவர்கள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

கௌரவ சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட அரச சட்டத்தரணியான சந்தேகநபர் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள இந்த ஆலோசனையானது, அவரது செல்வாக்கின் பேரிலேயே இடம்பெற்றுள்ளதாகவும், அவரது வாக்குமூலத்தை நீதிமன்றில் பகிரங்கமாக பரிசீலிக்காமல் இவ்வாறு விடுவிக்க நடவடிக்கை எடுப்பது அநீதியானது எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் உறுதியாக நம்புகின்றனர். இது தொடர்பான எதிர்ப்புக்கள் மற்றும் சட்டக் காரணங்களை அடுத்த தவணையின் போது நீதிமன்றில் முன்வைக்க சட்டத்தரணிகள் எதிர்பார்க்கின்றனர்.

வழக்கு ஒத்திவைப்பு: 

முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதவான், கௌரவ சட்டமா அதிபர் ஆலோசனை தொடர்பான பாதிக்கப்பட்ட தரப்பின் எதிர்ப்பைத் தாக்கல் செய்ய சந்தர்ப்பம் வழங்கி, வழக்கினை 2026 மார்ச் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார். 

அடுத்த வழக்குத் தவணையின் போது பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையாகி விடயங்கள் முன்வைப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி (PC) எம். ஏ. சுமந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் இதன்போது நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டது