யாழ்.தையிட்டியில் விகாரை அமைப்பு பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுப்பரா? VIDEO
முல்லைத்தீவு மாவட்டத்தை தொடர்ந்து இப்போது யாழ்.மாவட்டத்திலும் பெளத்த விகாரைகள் கட்டப்பட்டு பெளத்த மயமாக்கல் வி ரிவுபடுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் வலி,வடக்கு பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சஜீவன் இது குறித்து பொறுப்புவாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவும் கூறியுள்ளார்.
வலி,வடக்கு தையிட்டி பகுதியில் அடாத்தாக பெளத்த விகாரை அமைக்கபடுவது குறித்து இன்று நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல்லினை வடமாகாண ஆளுநர் நாட்டியுள்ளார். அத்துடன் தையிட்டி ஜே 250 கிராம சேவகர் பிரிவில் உள்ள காணியொன்றையும் பௌத்த தேரர்கள் உரிமை கோரியுள்ளனர்.
இப் பகுதிக்கு உரித்தன் களட்டி என காணப்பட்ட பெயரினை சிங்கள களட்டி என மாற்றியுள்ளனர். இவ்வாறான நிலையில் தேரர்கள் உரிமை கோரும் காணியின் உறுதிபத்திரம் தொடர்பாக எமக்கு சந்தேகங்கள் காணப்படுகின்றது. அதனை நம்ம முடியாத நிலை உள்ளது.
இலங்கை அரசாங்கமானது திட்டமிட்ட வகையில் தமிழர் தாயக பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் முல்லைதீவானது தற்போது பறிபோய் உள்ளது. இப்போது யாழ்ப்பாணத்தில் விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு வடக்கு மாகாண ஆளுநர் துணை போகின்றார். ஏற்கனவே யாழ்.குடாநாடு உட்பட வடக்கினை இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில் தற்போது விகாரைகளை அமைத்து அங்கு சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளவே நல்லாட்சி அரசு முயற்சிக்கின்றது.
குறிப்பாக தற்போது விகாரை அமைக்கப்படவுள்ள தையிட்டி பகுதியில் சிங்கள மத்தவர்கள் எவரும் இல்லாத நிலையில் அங்கு விகாரை அமைப்பதனூடாக அங்கே சிங்கள குடும்பங்களை குடியமர்த்துவநற்கே முயற்சிகள் இடம்பெறுகின்றன.
இது அங்கு இன முரண்பாடுகளையும் தோற்றுவிக்க கூடிய நிலை காணப்படுகின்றது என்றார்.