SuperTopAds

எம்மிடம் இருக்கும் வளங்கள் போதாதா? மகாவலி நீர் தேவைதானா? முதலமைச்சர் கேள்வி..

ஆசிரியர் - Editor I
எம்மிடம் இருக்கும் வளங்கள் போதாதா? மகாவலி நீர் தேவைதானா? முதலமைச்சர் கேள்வி..

மகாவலி அதிகார சபையானது எமக்கு மகாவலி நீரைத் தருவதாகக் கூறித்தான் வடமாகாணத்தினுள் வந்தது. 30  வருடத்திற்கும் மேலாக மகாவலி நீர் 'இந்தா வரப்போகின்றது' 'அந்தா வரப்போகின்றது' என்று கூறித்தான் மகாவலி செயற்திட்டங்களை வகுத்தார்கள். 

இன்னமும் ஒரு துளி நீர் ஏனும் வரவில்லை. எமது பொறியியலாளர்கள் அது என்றும் வராது என்றே கூறுகின்றார்கள். ஆனால் அதை வைத்து என்ன செய்துள்ளது அரசாங்கம்? நாட்டின் இதர பாகங்களில் இருந்து மகாவலி நீரைக் கொண்டு வருவதால் இங்கு தாம் நினைத்தபடி வலையங்களை அமைத்தார்கள்.

மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன் கூறியுள்ளார். இன்று யாழ்.கலை மகள் சனசமூக நிலையத்தின் 65வது ஆண்டு வி ழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இத ன்போது மேலும் அவர் கூறுகையில்,

 'L' வலயத்தில் குடியிருத்தப்படும் மக்கள் கூட்டம் நாட்டின் இன விகிதாசாரத்தை ஒட்டியே தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி மணலாற்றைத் தற்போது வலி ஓயா ஆக்கி விட்டார்கள். 

2007ல் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியில் அதாவது யுத்த காலத்தில் கரவாகப் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிச் செய்தியில் மகாவலி வலயமானது முல்லைத்தீவு நகரத்தையும் உள்ளடக்கி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் கணிசமான அளவு காணிகள் மகாவலி அதிகாரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால்த்தான் நாயாறில் சிங்கள மீனவர் குடியேற்றங்கள் நடைபெற்றன. 

நீதிமன்றம் அத்துமீறியவர்கள் என்று அடையாளப்படுத்திய வேற்று மாகாண மக்களை மகாவலி அதிகாரசபை பேர்மிட் கொடுத்து அவர்களை அங்கு தொடர்ந்திருக்க வழி வகுத்துள்ளது. இதில் இரண்டு விடயங்கள் அடங்கியுள்ளன. 

ஒன்று மகாவலி நீர் வரவில்லை என்பது! அத்துடன் அநேகமாக அது வராது என்பது. ஆனால் இரண்டாவது அதை வைத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் பெருவாரியான நிலப்பரப்பில் நாட்டின் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் மக்களைக் குடியேற்ற தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

ஆகவேதான் நான் கேட்கின்றேன். 'மகாவலி நீர் எமக்குத் தேவையா? மகாவலி செயற்றிட்டங்கள் எமக்குத் தேவையா? எம்மிடம் இருக்கும் வளங்களைக் கொண்டு எம்மை நாம் பார்த்து வர முடியாதா?' இவற்றையெல்லாம் எமது மக்கள் பிரதிநிதிகள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என்றார்.