சயந்தனின் பொறுப்பற்ற செயலால் கூட்டமைப்புக்கு ஏற்பட இருந்த அவமானம்!!

சாவகச்சேரி நகர சபைக்குத் தமிழ் அரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்யுமா இல்லையா என்பது தொடர்பில் கடைசி நிமிடம் வரையில் நேற்றுப் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
வேட்பாளர் தெரிவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் மற்றும் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தபவலான் ஆகியோருக்கு இடையிலான நீண்ட இழுபறி மற்றும் கருத்து மோதலே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான நேரம் நிறைவடைவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னரே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனுவை நேற்றுத் தாக்கல் செய்தது.
சாவகச்சேரி நகர சபைக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பை சயந்தன் மற்றும் அருந்தவபாலன் இருவரிடமும் கட்சி ஒப்படைந்திருந்தது.
ஆனால், வேட்பாளர் தெரிவில் இருவருக்கும் இடையில் தொடர்ந்து முரண்பாடு நீடித்து வந்தது. இருவரும் தத்தமது ஆதரவாளர்களை நிறுத்துவதிலேயே முனைப்புக்காட்டினர்.
இதனால் வேட்பு மனுத் தாக்கலின் இறுதி நாளான நேற்றுக் காலை வரையிலும் எந்த இறுதி முடிவும் எட்டப்படாமல் இருந்தது.
கட்சியின் தலைமைக்கு விடயம் தெரிவிக்கப்பட்டது. கட்சியின் தலைமையினாலும் பிரச்சினைக்கு தீர்வு வழங்கமுடியவில்லை.
வேட்பு மனுத் தாக்கல் மதியம் 12 மணிக்கு முடிவடைய இருந்த நிலையில், 11.55 மணியளவிலேயே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அவசர அவசரமாகத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தது. அந்த வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.