SuperTopAds

ஜிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது பாகிஸ்தான்

ஆசிரியர் - Editor II
ஜிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது பாகிஸ்தான்

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகளிலும் பாகிஸ்தான் வென்று 4-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5-வது ஒருநாள் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக், பகர் சமான் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் இருந்தே இருவரும் அடித்து ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. பகர் சமான் 20 ரன்கள் எடுத்தபோது, ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.

முதல் விக்கெட்டாக பகர் சமான் 85 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய பாபர் அசாமும் தனது அதிரடியை தொடர்ந்தார். இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்துள்ளது. பாபர் அசாம் 76 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணியில் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை.

விக்கெட் கீப்பர் ரியான் முர்ரே மட்டும் 47 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக பிரின்ஸ் மசுவா 39 ரன்களும், ஹாமில்டன் மசகாடா, தினாஷே கமுனுகாவே ஆகியோர் 34 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. பீட்டர் மூர் 44 ரன்களுடனும், எல்டன் சிகும்பரா 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி 5-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.