SuperTopAds

‘பிசாசு நகரம்’: எச்சரிக்கும் அரசு, செல்ல துடிக்கும் மக்கள்

ஆசிரியர் - Editor II
‘பிசாசு நகரம்’: எச்சரிக்கும் அரசு, செல்ல துடிக்கும் மக்கள்

கல்நார் சுரங்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நகரம் இது. இந்த நகரம் மேற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. இதனை பிசாசு நகரம் என்று அழைக்கின்றனர்.

இந்த பிசாசு நகரத்திற்கு செல்ல வேண்டாம் என்று அரசு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். ஆனால், அதற்கு செவிமடுக்கதான் யாரும் தயாராக இல்லை. சுற்றுலா பயணிகள், திகிலில் ஆர்வம் கொண்ட மக்கள் என பலர் தினமும் இந்த திகில் விட்டிநூம் நகரத்திற்கு வருகிறார்கள். இந்த கல்நார் சுரங்கம் 1970 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

இந்த சுரங்கமானது ஆஸ்திரேலியாவின் பெர்த்திற்கு வடக்கே 1,100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

ஒரு காலத்தில் இது பரப்பான சுரங்கப்பகுதியாக இருந்தது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த சுரங்கத்தில் பணிபுரிந்தனர். ஆனால், துரதிருஷ்டமான ஒரு நாளில் கல்நார் சுரங்கத்தில் நடந்த விபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

அதனை தொடர்ந்து இந்த பகுதி சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளான பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்தப் பகுதிக்கு செல்வதும் தடை செய்யப்பட்டது.

செர்னோபில் மற்றும் இந்தியாவின் போபாலில் நடந்த விபத்தைவிட மோசமான விபத்து அது. ஆஸ்திரேலியா அரசாங்கம் பாதுகாப்பு மற்றும் சுகாதார பெரும் விபத்து என்று அதனை வர்ணித்தது.

அந்த நகரத்திற்கு செல்வது பாதுகாப்பானது இல்லை. அங்குள்ள சூழலியல் மாசினால் உடல்நல கேடுகள் ஏற்படலாம். அங்கு செல்லாதீர்கள் என்று எச்சரிக்கும் வண்ணம் வழி நெடுகிலும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இதனை கேட்கதான் யாரும் தயாராக இல்லை. மக்கள் தினம் தினம் சுவாரஸ்யத்திற்காக அங்கு செல்கிறார்கள்.

சிறிது நேரம் அங்கு செலவிடுவதால் ஒன்றும் ஆகிவிடாது என்கிறார்கள் அங்கு சென்று வருவோர்.

தடைசெய்யப்பட்ட இந்த சுரங்கமானது அருவிகள் நிறைந்த கரிஜினி தேசிய பூங்காவுக்கு செல்லும் வழியில் இருக்கிறது.

மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லி ஒயிட் தனது தோழியுடன் கரிஜினி தேசிய பூங்காவுக்கு சென்று இருக்கிறார். அப்போது அவர் மட்டும் இந்த சுரங்க பகுதியை பார்வையிட்டுள்ளார்.

பிபிசியிடம் பேசிய ஒயிட், நான் அந்த பகுதிக்கு செல்லும் முன்பே அந்த பகுதி குறித்து படித்துவிட்டுதான் சென்றேன் என்கிறார்.

அந்த பகுதி குறித்தான எந்த தகவல்களும் இவருக்கு அச்சமூட்டவில்லை. தைரியமாக அந்த பகுதிக்கு சென்று இருக்கிறார்.

சிறிது நேரம் மட்டுமே அங்கு இருப்பதால் ஒன்றும் ஆகிவிடாது என்கிறார் ஒயிட்.

மேலும் அவர், இந்த பிசாசு நகரத்தையும், கைவிடப்பட்ட அதன் சுற்றுபுறத்தையும் பார்ப்பது மிக சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கிறது என்கிறார்.

பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் இல்லாமல் அவர் அந்த சுரங்க பகுதிக்கு சென்று இருந்தாலும், அவரது தோழி அந்த நகரத்திற்கு வர தயாராக இல்லை.

இந்த செயல் மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் அதிகாரிகள்.

அந்த பகுதி முழுவதும் கல்நாரின் மாசு கலந்து இருப்பதாக எச்சரிக்கிறார்கள் அரசு அதிகாரிகள்.

ஒயிட்டை போல சிலர் அந்த சுரங்கத்தை பார்வையிட்டு, அதனை படம்பிடித்து யூ டியுபிலும் பதிவேற்றி இருக்கிறார்கள்.

இந்த காணொளிக்கு கலவையான பின்னூட்டங்கள் வந்துள்ளன. சிலர் இதனை தீரமிக்க செயல் என பாராட்டி இருக்கிறார்கள். சிலர் இதனை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள்.

இந்த காணொளியை சமூக ஊடகத்தில் கண்ட அரசு அதிகாரிகள், அங்கு செல்வது எந்த வகையிலும் பாதுகாப்பானது இல்லை என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளாரகள்.

அங்கு செல்வதால் நுரையீரல் புற்றுநோய்கூட வரலாம் என்று எச்சரிக்கின்றனர்.