கொழும்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் இரகசிய கூட்டத்திற்கு பிள்ளையானும் அழைப்பு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் கொழும்பில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்கு பிள்ளையானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிள்ளையானுக்கு பதிலாக அவரது சகாவான இனியபாரதி கலந்துக்கொண்டுள்ளார். இங்கு என்ன பேசப்பட்டது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சபாநாயகர் அனைத்து உறுப்பினர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். சிங்கள செய்தி ஒன்றில் ' அச்சுனாவுக்கும், சாணக்கியனுக்கும் சபாநாயகர் கடும் எச்சரிக்கை ' இருவரின் செயற்பாடுகளும் மோசமானது ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாராளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடு மிக மோசமானது.
சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டு சபாநாயகர் எமக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது. பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு.நாட்டின் மூன்றாவது பிரஜையான சபாநாயகர் முறையாக செயற்பட வேண்டும்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பபிக்கப்படுவதற்கு முன்னர் கடந்த அரசாங்கத்தில் இருந்த பிரபல அமைச்சர் ஒருவரின் வர்த்தக மையத்தில் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டவர்கள் தொடர்பில் பார்த்தால் அது பிரச்சினைக்குரியதே.
குறித்த கூட்டத்தில் இராணுவ புலனாய்வு பணிப்பாளராக இருந்த சூலகொடிதுவக்கு, கொழும்பு குற்றவியல் பிரிவில் இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் நெவில் ஆகியோர் இருந்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவர் வராமையினால் அவரின் சகா இனியபாரதியை அனுப்பியுள்ளார். இனியபாரதி ஹில்டன் ஹோட்டலில் இருந்துள்ளார். அவரின் வாகனத்தை சுதா என்பவர் செலுத்தியுள்ளார். இங்கு என்ன சூழ்ச்சி செய்யப்பட்டது என்று தெரியவில்லை. இது தொடர்பில் உங்களுக்கு எதுவும் தெரியுமா? இனிய பாரதி என்பவர் கடந்த காலங்களில் பல்வேறு கொலைகளுடன் தொடர்புடையவர். பிள்ளையான் தொடர்பிலும் பல தகவல்கள் உள்ளன.
நீங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கூறுகின்றீர்கள். ஆனால் கணேமுல்லை சஞ்சீவவை கொன்ற பெண்ணை இன்னும் தேடுகின்றீர்கள். நாட்டின் பொலிஸ்மா அதிபரையும் தேட முடியவில்லை. உங்களுக்கு பொறுப்பு உள்ளது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை உள்ளது குறித்த கூட்டத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இவ்வாறான தேசிய பிரச்சினைகள் பற்றி பேசும் போது சபாநாயகர் எமக்கு களங்கம் ஏற்படுத்துகிறார். எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அதேபோல் பாராளுமன்ற செயலாளர்களும் நடுநிலையுடன் செயற்பட வேண்டும். சபை நடவடிக்கைகள், முறைமைகள் தொடர்பில் சபாநாயகருக்கு சொல்லிக் கொடுங்கள் என்றார்.