SuperTopAds

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் புதிய தீர்மானம் அவசியம்!

ஆசிரியர் - Admin
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் புதிய தீர்மானம் அவசியம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம் தமிழ் மக்களின் சம்மதத்தினை பெறவேண்டும் என்றால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏனைய சர்வதேச நீதி கட்டமைப்புகளிலும் பாரப்படுத்தும்,புதிய தீர்மானம் அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.     

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58 வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் குறித்து இலங்கையில் உள்ள இணைஅனுசரணை நாடுகளின் தூதரகங்களிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இதனை தெரிவித்துள்ளது.

அந்த கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மேலும் தெரிவித்துள்ளதாவது

2021 ஜனவரி 15ம்திகதியும் பெப்ரவரி 24ம் திகதியும் செப்டம்பர் 8 ம் திகதியும் 2022 பெப்ரவரி 25ம் திகதியும் கூட்டாக வெளியிட்ட கடிதங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே, தீர்மானத்தின் நகல்வடிவம் வெளியாவதற்கு முன்னரே நாங்கள் முன்னைய தீர்மானங்கள் குறித்து ஏமாற்றமடைந்துள்ளோம் அவை பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை,குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் என தெரிவித்திருந்தோம்.

இந்த விவகாரங்கள் தொடர்பான தீர்மானங்கள் பிரச்சினைக்குரியவையாக காணப்படுகின்றன,இவை அரசியல் சூழமைவை சரியாக இனம்காணதவறிவிட்டன,என தெரிவித்த நாங்கள் பின்வரும் விடயங்களை குறிப்பிட்டிருந்தோம்.

அனைத்து முன்னைய தீர்மானங்களும் ஜெனீவாவில் பொறுப்புக்கூறலை தேக்கமடையச்செய்கின்றன.மேலும் இவை இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்குகின்றன.

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் இரண்டு உறுப்பினர்களை கொண்டுள்ள இணை அணுசரனை நாடுகள், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாங்கள் கேட்டிருந்தோம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு உதவும் வகையில் ஆதாரங்களை சேகரிப்பதற்கான சுயாதீனஅமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

இலங்கையில் தொடரும் வன்முறைகளை கண்காணித்துஅறிக்கையிடுவதற்காக விசேட அறிக்கையாளரை நியமிக்கும் வகையிலும்,வடக்குகிழக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகங்களை ஏற்படுத்தும் விதத்திலும் தீர்மானங்களில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

பாதுகாப்பு அபிவிருத்தி தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் இராணுவத்தையும் அரசதிணைக்களங்களையும் பயன்படுத்துவதையும் முன்னைய தீர்மானங்கள் கருத்தில் கொள்ள தவறிவிட்டன என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம்.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகள் தொடர்பான அலுவலகம் ஆகியவை குறித்து நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் தீர்மானங்கள் காணப்படுவது குறித்த எங்கள் கரிசனையை வெளியிட்டிருந்தோம். இரு அலுவலகங்களும் அவை உருவாக்கப்பட்ட நோக்கம் அவற்றின் கட்டமைப்பு ஆகியவற்றில் தவறுகளை கொண்டவையாக காணப்படுகின்றன.

இதேவேளை தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான ஆரம்புள்ளியாக கூட 13வது திருத்தத்தை நாங்கள் ஏற்க தயாரில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இலங்கை குறித்த முதலாவது தீர்மானம் 2012 இல் நிறைவேற்றப்பட்டு பல வருடங்களாகிவிட்டது. எங்களின் எச்சரிக்கைகள் ஒவ்வொன்று சரியானவை என்பது நிரூபணமாகியுள்ளது.

அரசியல் கைதிகளை தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்படும் சட்டம் நீதியானது இல்லை அதனை நீக்கவேண்டும் என நீதியமைச்சர் உட்பட முக்கிய அமைச்சர்கள் தெரிவித்துள்ள போதிலும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில் வாடுகின்றனர்.

இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முன்னைய தீர்மானங்களை, இலங்கை விவகாரத்தில் தலையிடுபவை, அரசியல் நோக்கம் கொண்டவை என நிராகரித்துள்ளதுடன் உள்நாட்டு பொறிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ஆகக்குறைந்தது 2024 ஆகஸ்ட் முதல் யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியமைக்காகவோ அல்லது மனித உரிமை மீறல்களிற்காகவோ எவரும்தண்டிக்கப்படமாட்டார்கள் என சிங்கள மக்களிற்கு மீண்டும்மீண்டும் உறுதியளித்துள்ளார். உருவாக்கப்படும் எந்த பொறிமுறையும் உண்மையை கண்டறிவதை நோக்கமாக கொண்டிருக்கும் பொறுப்புக்கூறலை நோக்கமாக கொண்டிராது என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலைகளில் இந்த அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களை போல குற்றவாளிகளிற்கு எதிராக சுயவிருப்புடன்நடவடிக்கைகளை எடுக்காது என்பது மிகவும் தெளிவாக தெரியவந்துள்ளது.

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்பதையே பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வலியுறுத்திவருகின்றனர். மீளநிகழாமைக்கு இது மிகவும் அவசியம். கடும் கவலையை ஏற்படுத்தும் பின்னணியில் நீங்கள் எங்களின் இந்த கடிதத்திலும்முன்னைய கடிதத்திலும் வலியுறுத்தப்பட்ட விடயங்களை கருத்தில் எடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி என்ற அடிப்படையில் கடந்தகால தீர்மானங்களை பின்பற்றி கொண்டுவரப்படும் எந்த தீர்மானத்தினாலும் நாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் ஆதரவை பெறமுடியாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம் தமிழ் மக்களின் சம்மதத்தினை பெறவேண்டும் என்றால் நாங்கள் இந்த விடயத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை அடிப்படையாக கொண்ட, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏனைய சர்வதேச நீதி கட்டமைப்புகளிலும் பாரப்படுத்தும்,புதிய தீர்மானம் அவசியம்.