கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து 3,464 பெயர் பதிவு

இந்திய-இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள 3,464 பெயர் பதிவு செய்துள்ளனர்.
கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். மீனவர்கள் தங்களின் வழிபாட்டுக்காக கச்சதீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயத்தை 1913ஆம் ஆண்டில் நிறுவனர். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சதீவில் அந்தோணியார் ஆலய விழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற உள்ள திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெபரத்தினம், இராமேஸ்வரம் பங்குத்தந்தை அசோக் வினோவுக்கு அனுப்பிய அழைப்பிதழை ஏற்று, இராமேஸ்வரத்திலிருந்து கச்சதீவு திருவிழாவுக்குச் செல்ல 79 விசைப்படகுகள் மற்றும் 23 நாட்டுப் படகுகளில், 2,720 ஆண்கள், 652 பெண்கள், 56 ஆண் குழந்தைகளும், 36 பெண் குழந்தைகளும் என மொத்தம் 3,464 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சாராத வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் தங்கள் ஊர்க் காவல் நிலையங்களில் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். அதுபோல மத்திய, மாநில அரசு பணியாளர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள தங்களின் அலுவலகத்தில் தடையில்லாச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
மார்ச் 14 அன்று மாலை 4 மணியளவில் கச்சதீவில் கொடியேற்றத்துடன் விழா ஆரம்பிக்கும். தொடர்ந்து ஜெபமாலை மன்றாட்டு, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும், இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனியும் நடைபெறுகிறது.
மார்ச் 15 அன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலியும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறும். இதனை தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா முடிவடையும். மேலும் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்ளும் இந்திய-இலங்கை இருநாட்டு பக்தர்களும் உணவு, தண்ணீர், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகளை யாழ்.மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.