SuperTopAds

செம்மணி பகுதியில் மீட்கப்பட்ட எலும்புகள் - நாளை வழக்கு விசாரணை

ஆசிரியர் - Admin
செம்மணி பகுதியில் மீட்கப்பட்ட எலும்புகள் - நாளை வழக்கு விசாரணை

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய நடைபெறவுள்ளது. 

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டன 

அதனை அடுத்து அத்திவாரம் வெட்டும் பணியை ஒப்பந்தக்காரர் நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் குறித்த பகுதியில் மேலும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் இருக்கலாம் என்றும் , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அரியாலை பகுதியை சேர்ந்த இருவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் குறித்த விடயத்தினை யாழ் .  நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு கடந்த  வியாழக்கிழமை நீதவான் விஜயம் மேற்கொண்டிருந்தார். 

அதன் போது, சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸார், தடயவியல் பொலிஸார்,நல்லூர் பிரதேச செயலர் ஆகியோரும் சம்பவ இடத்தில் பிரசன்னம் ஆகியிருந்தனர். 

குறித்த பகுதிகளை ஆராய்ந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதவான், மீட்கப்பட்ட எலும்பு துண்டுகளை பகுப்பாய்வுக்கு அனுப்புமாறும் , ஏனைய பகுதிகளை  ஸ்கானர் இயந்திர உதவியுடன் முழுமையாக பரிசோதனை செய்யவும் நீதவான் கட்டளையிட்டார். 

அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில், பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, வழக்கினை நாளைய தினம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.